Monday, November 11, 2013


அறிவியல் தூய்மையானது; தொழில்நுட்பம் புனிதமானது"

"அறிவியல் தூய்மையானது; தொழில்நுட்பம் புனிதமானது. அதை பயன்படுத்துவோரின் கையில் தான் ஆக்கமும் அழிவும் இருக்கிறது" என, "இஸ்ரோ" முன்னாள் விஞ்ஞானி முத்து பேசினார்.


கோவை மாவட்ட அளவிலான 21வது குழந்தைகள் தேசிய அறிவியல் மாநாடு சரவணம்பட்டி எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பில் நடந்த இந்த மாநாட்டில், பள்ளி குழந்தைகளின் சிறந்த படைப்புகள் கண்டறியப்பட்டு அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி அளிக்கப்படும்.

கோவை மாவட்ட அளவில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் இதில் பங்கேற்றன. துவக்க விழாவில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் வேலுசாமி தலைமை வகித்தார்.

விழாவில் "இஸ்ரோ" முன்னாள் விஞ்ஞானி முத்து பேசியதாவது: "அறிவியலை மாணவர்கள், கற்றல், கேட்டல் மட்டுமின்றி, எதையும் கைப்பட செய்து பார்த்தால், அதை மேம்படுத்தும் யோசனைகள் வரலாம். புதியவற்றை கண்டுபிடிக்கும் எண்ணம் உருவாகும். கற்றல், கேட்டலோடு மட்டுமின்றி செய்முறையும் அவசியம். மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று வெற்றிகளை பெற வேண்டும்.

அறிவியல், தொழில்நுட்பங்கள் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமின்றி, அழிவுக்கும் வித்திடுகிறது என்பது பலரது வாதமாக இருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பத்தின் நன்மைகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். அறிவியல் தூய்மையானது; தொழில்நுட்பம் புனிதமானது. ஆக்கமும், அழிவும் நம் கையில் தான் உள்ளது." இவ்வாறு, அவர் பேசினார்.
மாணவர் விடுதிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்த காப்பாளர்களுக்கு அரசு உத்தரவு

ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் பணியாற்றும் காப்பாளர்கள், மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தி அதற்கான அறிக்கையினை துறை அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.


மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் அரசு ஊழியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் நடந்தது. ஆதிதிராவிடர் விடுதிகளை ஆய்வு செய்து தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்க வேண்டுமென துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

துப்புரவு ஊழியர்களை பணியமர்த்துவது, சமைப்பதற்கு தேவையான பாத்திரங்கள் உள்ளனவா என கண்டறியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் பணியாற்றும் காப்பாளர்கள், மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டுமென்றும், அது தொடர்பான அறிக்கையினை துறை அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்ற அரசு உத்தரவை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
பள்ளி தகவல் மேலாண்மை விபரங்களுடன் மாணவர்களை புகைப்படம் எடுக்க அரசு உத்தரவு

தமிழகத்தில் பள்ளி தகவல் மேலாண்மை விபரங்களுடன் மாணவ, மாணவிகளின் போட்டோக்களை எடுத்து பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து வகை மேலாண்மையின் கீழ் செயல்படும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் போட்டோக்களை கல்வித் தகவல் மேலாண்மை முறையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் சுய விபரங்களுடன் ஒருங்கிணைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் போட்டோ எடுக்கப்பட்டுள்ளதா என்பது சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

போட்டோ எடுக்கப்படாத மாணவர்களுக்கு பொருத்தமான வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றிபோட்டோ எடுக்க சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். உயர் தர செல்போன் வசதி கொண்டு மாணவர்களை போட்டோ எடுப்பது, வெப் காமிரா வசதி கொண்ட கம்ப்யூட்டர் மூலம் மாணவர்களை போட்டோ எடுப்பது, 20பேர் அல்லது 10பேர் கொண்ட அணியாக நல்ல தரமான போட்டா கருவி மூலம் தரமான போட்டோ எடுத்து தனித்தனி போட்டேவாக மாணவர்களின் போட்டோக்களை பிரித்து எடுப்பது போன்ற முறைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதிரி பள்ளி கல்வி திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

"வியாபார நோக்கத்தில் நிறுவப்படும் மாதிரி பள்ளிக் கல்வித் திட்டத்தை, மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் அண்ணாமலை கூறினார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், அனைவருக்கும் தரமான கல்வி என்பது வரவேற்கத்தக்கது. 40 சதவீதம் அரசு, 60 சதவீதம் தனியார் என்ற ஒதுக்கீட்டில் கல்வியை வியாபாரமாக்கும் "ராஷ்டிரிய ஆதர்ஸ்" எனும், மாதிரி பள்ளி கல்வித் திட்டம் ஏற்புடையதல்ல.

இப்பள்ளிகளுக்கு, மாநில அரசு இடம் தந்து விட்டு, ஒதுங்கி கொள்ள வேண்டும். நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கான சம்பளத்தில் 90 சதவீதம், தனியார் நிர்ணயிக்கும் நிலையால், இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். தற்போது நடைமுறையிலுள்ள ஆங்கில வழிக்கல்வி முறையை தமிழக அரசு விலக்கிக் கொள்ள வேண்டும்.

மூன்று முறை நடந்த 2 லட்சம் பேர் பங்கேற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், 46 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து உள்ளனர். கொள்குறி வகை தேர்வு முறையிலான இத்தேர்வை, ரத்து செய்ய வேண்டும். கடந்த 2004ல் அமல்படுத்திய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் 54 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.35 ஆயிரம் கோடி யாருக்கும் பயனின்றி உள்ளது.

இதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து டிச.20ல் டில்லியில் பார்லிமென்ட் முன் தர்ணா நடத்த உள்ளோம் என்றார்.

ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்: 30 ஆண்டுகளுக்கு பின் வெண்கலம்

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் சத்யன். மேசைப் பந்து (டேபிள் டென்னிஸ்) விளையாட்டில் சாம்பியன். செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரியில், 4ம் ஆண்டு பி.டெக்-ஐ.டி., படிக்கிறார்.

பள்ளி மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, 100க்கும் மேலான பதக்கங்களை குவித்துள்ளார். இந்த ஆண்டு துவக்கத்தில் டில்லியில் நடந்த போட்டியில், இவரது தலைமையிலான அணி, தங்க பதக்கத்தை வென்றது.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே மேசைப்பந்து பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். 1999ல் சென்னை கே.கே. நகரில் நடந்த பள்ளி அளவிலான முதல் போட்டியில் பரிசு பெற முடியவில்லை. ஆனால் சிறந்த வளரும் வீரர் சான்று பெற்றேன். அதன் பின், கேரள மாநிலம் ஆலப்புழாவில், 2006ம் ஆண்டு நடந்த, சப்-ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில், பட்டத்தை வென்று முதல்முறையாக கால் பதித்தேன்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 2010ம் ஆண்டு ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றேன். சீன வீரர்கள் என்றாலே அசைக்க முடியாத ஜாம்பவான்கள். உலகின் ஆறாம் நிலை வீரரான சீனாவை சேர்ந்த யின் ஹாங் கால் என்பவரை இறுதியில் வீழ்த்தி வெண்கலம் வென்றேன். இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக, இந்த போட்டியில் இந்தியா வெண்கலம் வென்றது.

மனதிடம் படைத்த நான் எந்த வீரர்களையும் பார்த்து, தளர்வடைய மாட்டேன். எதிராளியின் போக்கினை புரிந்து கொண்டு திருப்பி அடிப்பேன். வெற்றிக்காக கடைசி வரை போராடுவேன். அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் காமன்வெல்த் போட்டி, 2016ல் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றில் பட்டம் வெல்வதே எனது இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தின் 11 கல்லூரிகளுக்கு ஒருமைவகை பல்கலை அந்தஸ்து

நாடெங்கிலும், 45 தன்னாட்சி கல்லூரிகள் ஒருமை வகை பல்கலைக் கழகங்களாக மாற்றப்படுகின்றன. இந்த பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த 11 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.


மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மற்றும் பல்கலைக்கழக நிதிக் குழு (யு.ஜி.சி.,) இணைந்து, டில்லியில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தின. இதில் அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 45 தன்னாட்சி கல்லூரிகள் ஒருமை வகை பல்கலைக் கழகங்களாக தரம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதாவது, ஒருமை வகை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற கல்லூரிகள் அவர்களே மாணவர்களுக்கு பட்டம் வழங்கிக் கொள்ளலாம். பிற பல்கலைக் கழகங்களை சார்ந்து இருக்க வேண்டாம். அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த, 11 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

கோவை - கொங்கு நாடு கல்லூரி, கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி

ஈரோடு - வெள்ளாளர் மகளிர் கல்லூரி

திருச்சி - செயின்ட் ஜோசப், திருச்சி ஜமால் முகமது, திருச்சி தேசிய கல்லூரி

மயிலாடு துறை - ஏ.வி.சி., கல்லூரி

சிவகாசி - ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரி

மதுரை - பாத்திமா கல்லூரி

பாளையங்கோட்டை - செயின்ட் சேவியர் கல்லூரி

இந்த கல்லூரிகளுக்கு, மூன்றாண்டு இடைவெளியில் அடிப்படை கட்டமைப்பு நிதியாக, 55 கோடி ரூபாய் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment